December 25, 2015

ஜோசப் பரராஜசிங்கத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இயேசு பாலகன் பிறந்த இதேபோன்றதொரு நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி ஆராதானையின் போது 2005 ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

தமிழத் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட இவர், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார்.



தனது 71வது வயதில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட இவரின் மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டது.
அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியின் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்ததுடன், இவர் எழுதிய பல கட்டுரைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்நது.

1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக தனது மனைவி கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.